சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தை தொடர்ந்து அடுத்தடுத்து காவல்துறையினர் மீது புகார்கள் குவிந்து வருகின்றன.
தற்போது சாத்தான்குளத்தைச் சேர்ந்த மார்ட்டின் என்பவரை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவலர்கள் சட்டவிரோதமாக காவலில் அவரை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து மார்டின் நீதிபதியிடம் புகார் அளித்தார். பொய்யான தகவல்கள் அடிப்படையில் காவலர்கள் மீது மார்டின் அவதூறு பரப்புகிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் கொலை மிரட்டல் ஆடியோ, மார்ட்டின் மீதான நிலுவை வழக்குகள் குறித்த ஆவணங்களை காவல் துறை சார்பில் நீதிபதியிடம் சமர்பிக்கப்பட்டது. இதனிடையே மார்ட்டின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குறிப்பிட்ட சமுதாய அமைப்பினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் மார்ட்டினுக்கு எதிராகவும் காவல் துறையினருக்கு ஆதரவாகவும் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (செப்.1) புகார் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் உஸ்மான், "சாத்தான்குளத்தில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், சிறுபான்மை சமூக மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய மார்ட்டின், பொன்பாண்டி போன்ற ரவுடி கும்பல்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்கள் மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டும் காவல்துறையால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது சாத்தான்குளம் காவல்துறை ஆய்வாளராக பொறுபேற்றுள்ள பெர்னாட் சேவியர் சட்டம் ஒழுங்கை சரிப்படுத்தும் நோக்கில் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்.
அதன்டிப்படையில் மார்ட்டின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே இது மாதிரியான சூழலில் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். மார்ட்டின் போன்றோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்" எனக் கூறினார்.
மார்டினால் கொலை மிரட்டலுக்கு ஆளான பாபு சுல்தான் பேசுகையில், "சென்ற ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் அழைபேசியில் தொடர்பு கொண்ட மார்ட்டின் என்னுடைய குடும்ப உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அவருடைய உறவினர்கள் ஐந்து பேருடன் வீட்டிற்கு வந்து வீட்டில் உள்ள பொருள்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி சென்றனர். இதனால் நாங்கள் வீட்டில் இருப்பதற்கே பயப்படுகிறோம். எனவே மார்ட்டின் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் உதவி ஆய்வாளரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரி மனு!