தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் உள்ள அம்பாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் தமிழர் திருநாளான பொங்கல் விழா மாணவர்களுக்கிடையே பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் நினைவுபடுத்தும் வண்ணம் நடைபெற்றது.
மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து பள்ளியின் முன்பு பொங்கல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளியிலிருந்து மாணவ மாணவிகள் குழுக்களாகப் பிரிந்து சிலம்பாட்டம், பறையடி, ஒயிலாட்டம் ஆடியபடி முன்செல்ல மாட்டு வண்டி ஊர்வலம், குதிரை ஊர்வலமும் தொடர்ந்து நடைபெற்றது.
ஊர்வலம், நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பள்ளி மைதானத்தை வந்தடைந்தது. விவசாயம், தமிழர்களின் பண்பாட்டை அடுத்த தலைமுறையினரும் தெரிந்துகொள்ளும் வகையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவை திரளான பொதுமக்கள் , மாணவர்கள், ஆசிரியர்கள் கண்டுகளித்தனர்.
இதேபோல், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மாநகராட்சி ஆணையர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய அடையாள உடையான புதிய வேட்டி , கைத்தறி சேலையை சீரூடையாக அணிந்தவாறு இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வண்ண கோலங்கள் வரையபட்டு அலுவலகம் முன்பு மூன்று பானைகள் வைக்கப்பட்டு, கரும்புகள் வைக்கப்பட்டு மாநகராட்சி ஆணையர் வி.பி. ஜெயசீலன் தனது மனைவியுடன் பொங்கலிடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து சிலம்பாட்டம், கோலாட்டம், தப்பாட்டம், பானை உடைத்தல், பலூன் உடைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன இதில் ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்து கொண்டு பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் கோலாகலமாக நடைப்பெற்ற சமத்துவ பொங்கல்