சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னீக்ஸ். இவர் செல்ஃபோன் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 19ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னீக்ஸ்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பென்னீக்ஸையும் அவரது தந்தை ஜெயராஜையும் கைது செய்து 21ஆம் தேதி கோவில்பட்டி சப் ஜெயிலில் காவலர்கள் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை பென்னீக்ஸ் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த சில மணி நேரத்திலேயே பென்னீக்ஸின் தந்தை ஜெயராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த ஜெயராஜும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இதனிடையே, நீதிமன்றக் காவலில் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் திரிபாதியை சந்தித்து திமுக எம்.பி கனிமொழி புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சாத்தான்குளத்தில் தந்தை, மகன் நீதிமன்றக் காவலில் சந்தேகமான முறையில் உயிரிழந்தது மிகப்பெரிய மனித உரிமை மீறல்.
காவல் துறை கட்டுப்பாட்டிலிருந்த இருவர் மரணமடைந்தது மிகப்பெரிய கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகிறது. இதற்கு பொறுப்பேற்று காவல் துறை உதவி ஆய்வாளர் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து இன்று புகார் அளித்துள்ளேன்.
இறந்தவர்களின் குடும்பத்தாரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்ல முடியாததால் எங்களுடைய மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அந்தக் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறார். இருவரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை அந்த மக்களுடன் இணைந்து திமுக தொடர்ந்து போராடும்.
புகாரைப் பெற்றுக்கொண்ட டிஜிபி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடன் சம்பவம் குறித்து நான் பேசி வருகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: காவல்துறை சித்ரவதையால் சிறைக்குள்ளேயே தந்தை-மகன் உயிரிழப்பு!