தூத்துக்குடி: குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் நகைக் கடன் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 27) பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
அதன்பிறகு இது குறித்து அங்கமங்கலம் பஞ்சாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் செய்தியாளரிடம் தெரிவிக்கையில், "குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் அங்கமங்கலம் பஞ்சாயத்துக்குள்பட்ட ஊர் பொதுமக்கள் அனைவரும் நகைக் கடன், விவசாயக் கடன், பயிர்க் கடன் ஆகியவற்றைப் பெற்றுள்ளோம்.
இந்நிலையில் சொந்த தேவைகளுக்காகவும், அவசர தேவைகளுக்காகவும் நகைகளைத் திருப்பி கேட்கச் செல்கையில் நகைகளைத் தராமல் அங்குள்ளவர்கள் அலைக்கழிக்கின்றனர். இது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் உயர் அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுவரை குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தின் மூலமாக மூன்று கோடி ரூபாய் அளவிற்கு நகைக்கடன் மோசடியும், 30 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி இருப்புத் தொகை மோசடியும் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன.
எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நகைக் கடன் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு அவரவர் நகைகளைத் திருப்பித் தர வேண்டும். மேலும், குரும்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் மீண்டும் செயல்படுவதற்கு ஆவன செய்ய வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: 'கமல் நாக்கை அறுத்துவிடுவேன் என்று கூறிய ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்க'