தூத்துக்குடி: மேலூர் ரயில் நிலையத்தில் இன்று (நவ 30) அதிகாலை பொதுமக்கள் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது 13 வயது சிறுமி ஒருவர் தனியாக இருந்துள்ளார். இதைப் பார்த்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் டேவிட் மற்றும் பொதுமக்கள் அந்தப் பெண்ணிடம் விவரங்களை கேட்டனர்.
அப்போது அந்த சிறுமி, தன்னுடைய பெயர் லலிதா என்றும், தனக்கு வயது 13 என்றும் கூறியுள்ளார். மேலும் நாகலாந்து மாநிலம் ஹிமாபுரில் வசித்து வந்ததாகவும், தனது பெற்றோர் ஹலாலுதீன் மற்றும் தாயுடன் ஏற்பட்ட கோபம் காரணமாக தனியாக நாகலாந்து மாநிலத்தில் இருந்து ரயில் ஏறி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பல மாநிலங்கள் வழியாக ரயிலில் பயணம் செய்து, தற்போது தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வந்து தவிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது தந்தையின் செல்போன் நம்பரை வாங்கி, சிறுமி குறித்த விவரத்தைத் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுமி, குழந்தைகள் பாதுகாப்பு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மதரஸா பள்ளியில் வடமாநில குழந்தைகள் சித்ரவதை! 12 குழந்தைகள் மீட்பு