தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து பல்வேறு சரக்குகளை ஏற்றிக் கொண்டு 'மெசையா' என்ற தோணி கடந்த 19 ஆம் தேதி லட்சத்தீவு பகுதியில் உள்ள கவரத்தி தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த தோணியில் மாஸ்டர் நசரேன், சந்திரபோஸ், பவுல் உள்ளிட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 7 மாலுமிகள் இருந்தனர்.
இந்த தோணி 22 ஆம் தேதி அதிகாலை 5 மணியளில் கல்பேனி தீவு அருகே சென்ற போது திடீரென கடல் சீற்றத்தில் சிக்கிக் கொண்டது. இதனால், கடல்நீர் தோணிக்குள் புகுந்து தோணி மெல்ல மெல்ல கடலில் மூழ்கத் தொடங்கியது. இதையடுத்து, தோணியில் இருந்தவர்கள் உடனடியாக தூத்துக்குடியில் உள்ள உரிமையாளரைத் தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் தூத்துக்குடி தோணி உரிமையாளர்கள் சங்கத்தினர் கல்பேனியில் உள்ள துறைமுக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், கடலோரக் காவல் படையினர் தோணியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், தோணியின் பெரும் பகுதி கடலில் மூழ்கியதால் தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் செயலிழந்திருந்தன.
இதையடுத்து, கடலோர காவல் படையினர் 'சுஜித்' என்ற ரோந்து கப்பல், சி-444 என்ற விரைவு படகு, டோனியர் விமானம் மூலம் தோணியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு மூழ்கும் கட்டத்தில் இருந்த தோணியை 22 ஆம் தேதி மாலையில் கண்டனர். கடல் கடும் சீற்றமாக காணப்பட்ட நிலையிலும் கடலோரக் காவல் படையின் சுஜித் ரோந்து கப்பல் மற்றும் சி-444 விரைவு படகு ஆகியவை அப்பகுதிக்குச் சென்று தோணியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 7 மாலுமிகளையும் மாலை 7 மணியளவில் பத்திரமாக மீட்டனர்.
ஆனால், ரூ.80 லட்சம் மதிப்பிலான தோணி கடலில் முற்றிலும் மூழ்கிவிட்டது. 7 மாலுமிகளையும் சுஜித் கப்பலில் ஏற்றி அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் 7 பேரும் கவரத்தி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, நேற்று (ஜன.22) காலையில் அங்குள்ள உள்ளூர் அலுவலர்களிடம் ஒப்படைக்கபப்ட்டனர்.
உயிர் தப்புவோமா என்ற சந்தேகத்தில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தங்களை காப்பாற்றிய இந்திய கடலோர காவல் படையினருக்கும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி தோணி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுக்கும் மாலுமிகள், அவர்களது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாலத்தீவுக்கு சென்ற தோணி நடுக்கடலில் கவிழ்ந்தது!