தூத்துக்குடி: 'தூத்துக்குடி மாநகரத் தந்தை' என அனைவராலும் போற்றப்படுகின்றவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து. இவரின் சிலைக்கு ஆண்டுதோறும் பிறந்தநாள் அன்று அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் இவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, மணிமண்டபமானது தூத்துக்குடி மையப் பகுதியில் அமைக்க வேண்டும் என பரதர் நல சங்க அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரை சந்தித்து மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் நேற்று (அக்.17) அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில், குரூஸ் பர்னாந்திற்கு 77.87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பீச் ரோட்டில் அமைந்துள்ள பூங்கா அருகில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பரதர் நல சங்க நிர்வாகிகள் கூறுகையில், "பீச் ரோட்டில் அமைந்துள்ள பூங்கா அருகில் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மணிமண்டபம் ஒதுக்குப்புறமான இடம் தவிர்த்து மக்கள் புழங்கும் இடத்தில் எம்ஜிஆர் பூங்காவில் வைக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் மைய பகுதியில் வைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி அனைத்து அமைப்புகளையும் பொதுமக்களையும் திரட்டி ஆர்ப்பாட்டம், பட்டினி போராட்டம் போன்றவை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் அவர் இது சம்பந்தமாக எந்த ஒரு விசாரணையும் செய்யவில்லை. மேலும், இது குறித்து 3 நாட்களில் முடிவு தெரியாவிட்டால் வரும் சனிக்கிழமை அனைத்து வியாபாரி சங்கங்கள், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம்" என்று கூறினர்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மட்டுமே அங்கீகாரம் - சபாநாயகர் அப்பாவு