தூத்துக்குடி: புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திருச்செந்தூர் கோயிலில் எடுக்கப்படும் ஒப்பந்தமுறைக் குப்பைகளை கையாள்வது கோயில் நிர்வாகத்தினருக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் சுகாதார வசதிகளைப் பேணுவதற்கு மிகுந்த சிரமாகவே உள்ளது.
அதிலும் குறிப்பாக, பக்தர்கள் ஆங்காங்கே விட்டுச் செல்லும் பல்வேறு கழிவுப் பொருட்கள் மற்றும் கோயிலில் இருந்து வரும் கழிவுப் பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி, திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொண்டு சென்று தரம் பிரிக்காமல், ஆறுமுகநேரி அருகே உள்ள ராணிமஹாராஜபுரம் கிராமப் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக அக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், அந்த குப்பைகள் கொட்டப்படும் இடங்களிலேயே தரம் பிரித்து, தேவையற்ற கழிவுகளைத் தீயிட்டு அழிப்பதாலும், அதன் மூலம் வெளியேறும் நச்சுப்புகை சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் பரவுவதாலும் பொதுமக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், நுரையீரல் சார்ந்த பல்வேறு நோய்கள் உருவாகி பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதனை முறைப்படுத்த வேண்டும் என்று ராணிமஹாராஜபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாகக் கூறி பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தினர் தங்கள் ஊர் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டி வருவதைக் கண்டித்து, அக்டோபர் 4ஆம் தேதி திருச்செந்தூர் பிரதான சாலையில் ராணிமஹாராஜபுரம் கிராம நிர்வாக கமிட்டி தலைவர் ரங்கநாதன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.
இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு அமெரிக்க டாலர்கள் கடத்தல் முயற்சி! வசமாக சிக்கிக் கொண்ட கடத்தல் குருவி!