தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணையத்தின் 26ஆம் கட்ட விசாரணை, தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்துள்ள ஒரு நபர் ஆணைய முகாம் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை 15ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்த விசாரணையில் பங்கேற்று விளக்கம் அளிப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடந்த தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், மருத்துவர்கள், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட 45 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதில் இன்று காலை வரை 27 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்நிலையில் ஒரு நபர் ஆணைய கமிஷன் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "26ஆம் கட்ட விசாரணை இன்று (மார்ச்.18) மாலையுடன் நிறைவு பெறுகிறது. 45 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் 27 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் இன்று விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நபர் ஆணையத்தின் அடுத்தக்கட்ட விசாரணை, தேர்தல் முடிந்ததும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். அடுத்தக்கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு தினத்தன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அனைவரையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இதுவரை 668 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆயிரத்து 116 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்திடம் நேரில் விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையம் ஏற்கனவே முடிவு செய்து சம்மன் அனுப்பியிருந்தது. அதற்கு அவர் பதில் மனு தாக்கல் செய்ததன் பேரில் ஆணையம் அதன் மீது பரிசீலனை நடத்தி வருகிறது.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் ’அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக பத்திரிகைகள் மூலமாக தகவல் தெரியவருகிறது. படப்பிடிப்புத் தளங்களை காட்டிலும் ஒரு நபர் விசாரணை முகாம் அலுவலகம் பாதுகாப்பானது. எனவே அவரை நேரில் விசாரணை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
அடுத்தக்கட்டமாக துப்பாக்கிச்சூடு நடந்த பொழுது பணியில் இருந்த உயர் காவல் அலுவலர்களிடம் விசாரணை நடத்தும் படலம் உள்ளது. இந்த வரிசையில் அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள், காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணை நடத்தப்படும். ஊரடங்கு காரணமாக எட்டு மாத காலம் விசாரணை நடத்தப்படாததால் ஒரு நபர் ஆணையம் விசாரணையானது நீடித்துக் கொண்டிருக்கிறது. இல்லையெனில் இந்த விசாரணை நிறைவு பெற்றிருக்கும்" என்றார்.