தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை மற்றும் நன்கொடை பணம் செலுத்துவதற்கு வசதியாக, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் 'க்யூ ஆர்' கோடு வழங்கும் நிகழ்ச்சி, கோயில் வளாகத்தில் இன்று (ஏப்ரல் 15) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோயில் அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார்.
இதற்கான 'க்யூ ஆர்' கோடு, வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ். கிருஷ்ணன் வழங்கினார். இதனை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள் முருகன் பெற்றுக் கொண்டார். மேலும், வங்கி சார்பில் திருச்செந்தூர் கோயிலுக்கு பணம் எண்ணும் எந்திரமும் வழங்கப்பட்டது. முன்னதாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பொது நாட்குறிப்பு புத்தகத்தை, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள் முருகன் வெளியிட்டார்.
அப்போது, கோயில் பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், தனியார் பாதுகாப்பு தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தனது சொந்த செலவில் வேட்டி, சேலைகளையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கோயில் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!