தூத்துக்குடி: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்கு நடத்துதல், தேர், குளங்களை புனரமைத்தல் போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கோபுர திருப்பணிகள், கோயில் வெளிப்பிரகார திருப்பணிகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டப் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். கந்த சஷ்டி, தைப்பூசம், விசாகம் ஆகிய நாட்களில் இங்கு லட்சக்கணக்கான பக்தர்கர்கள் வருகை தந்து சாமி தரிசணம் செய்வார்கள். கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் திருக்கோயில் திருப்பணிகள் உடன் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், இன்று சுப்பிரமணியசாமி திருக்கோயில் கிழக்கு மற்றும் சால கோபுர திருப்பணிக்கான பாலாலயம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு உதயமார்த்தான்ட அபிசேகமும் நடைபெற்றது. காலை 8 மணிக்கு யாகசாலை மண்டபத்தில் பாலாலயம் பூஜை தொடங்கியது. பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. கிழக்கு கோபுரம் மற்றும் சால கோபுரத்திற்கு ஆவாகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து பந்தல் கால் நடப்பட்டது.
பின்னர் விமான தளத்திலிருந்து யாகசாலை மண்டபத்திற்கு ஆவாகனம் செய்யப்பட்ட கும்பங்கள் எடுத்துவரப்பட்டது. அங்கு வைக்கப்பட்ட கும்பங்களுக்கு சிறப்பு ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்றது. மாதிரி கோபுரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.