தூத்துக்குடி கோரம்பள்ளம் ஊராட்சியை சார்ந்த ஶ்ரீனி நகர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியதாவது;
தங்கள் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்படும் தனியார் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் மீன், நண்டு, இறால், உட்பட கடல் உணவுகள் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் அந்நிறுவனம் குடியிருப்பு அருகில் உள்ள இடங்களில் கழிவுநீரை வெளியிடுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு அப்பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் வாந்தி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கழிவு நீரை அருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துவிடும் அபாயம் உள்ளது.
மேலும் அந்த நிறுவனம் மாசுகட்டுப்பாடு வாரியத்தின் விதிகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் மதிப்பளிக்காமல் இயங்கி வருவதாக தெரிகிறது. எனவே அரசு துறை அனுமதி பெற்று மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்குகிறதா என்ற சந்தேகம் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”
இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.