தூத்துக்குடி: மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெறும் காவல் அத்துமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.05) மனு அளிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி பாத்திமா பாபு தலைமையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு உறுப்பினர் ரீகன் உள்பட பலர், ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
தொடர்ந்து கூட்டியக்க குழு நிர்வாகி இசக்கிமுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பல்வேறு சம்பவங்களிலும் காவல்துறையினர் அத்துமீறி அப்பாவி பொதுமக்களை காவல் சித்திரவதைக்கு உள்ளாக்கி வருகின்றனர். இதை நிரூபிக்கும் முகமாக சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டுள்ளார்.
தகராறு குறித்து ஏற்கனவே காவல்துறையினரிடமும், மனித உரிமை ஆணையத்திலும் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் காவல்துறை உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்ட பின் அவருடைய தாயார் எலிசபெத் உடல்நலமின்றி உயிரிழந்தார்.
ஆகவே காவல் அத்துமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீதான பணியிடை நீக்கம் நடவடிக்கை மட்டும் போதாது. கொலை குற்றத்துக்கு என்ன தண்டனை வழங்கப்படுமோ அதை வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:'சாத்தான்குளம் போல் உன்னை கொன்றுவிடுவேன்' மிரட்டிய காவலர்; தற்கொலைக்கு முயன்ற விவசாயி!