தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி கிராமத்தில் 'ஊருக்கு நூறு கை இணைந்து குளம் ஆழப்படுத்தும் பணி' திட்டத்தின் கீழ் அங்குள்ள குளத்தினை சீரமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். விளாத்திகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தார்.
பின்னர், கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஆன்லைன் டிக்கெட் விற்பனை திரைத் துறைக்கு ஆரோக்கியத்தை தரும். இந்தத் தொழில் மேம்படும் நிலையை இந்த அரசு முன்னெடுத்திருக்கிறது" எனத் தெரிவித்தார்.
நடிகர்களின் சம்பளம் வரைமுறைப்படுத்தப்படும் என்று சொன்ன அவர், தயாரிப்பாளர்களின் எந்தப் படங்களில் செலவு உள்ளிட்டவைகளை முழுமையாக அறிகின்ற நேரத்தில் எல்லாமே இறுதி வடிவம் பெற்று அனைத்துமே சராசரியாக சரி செய்யப்படும் நிலை உருவாகும் எனக் கூறினார்.
பின்னர், அஞ்சல் துறையில் தேர்வுகளை தமிழிலேயே எழுத மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற்றுத் தந்தது அதிமுக அரசுதான் எனச் சொன்ன அவர், நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியில் மாற்றம் செய்யும் பணி வேகமாக நடைபெற்றுவருவதாகவும் கூறினார். தாய் மொழியான தமிழை காக்கும் அரசாக அதிமுக அரசு இருக்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.