இந்தியா முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் நாளை மூடப்படுகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றே கடைகளை அடைக்க வேண்டும் என வியாபாரிகளை, காவல் துறையினர் மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மக்கள் ஊரடங்கு உத்தரவை வேண்டுகோளை ஏற்று தூத்துக்குடி வணிகர்கள் நாளை கடைகளை அடைக்க தயாரான நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி இன்று திடீரென கடைகளை காவல் துறையினர் அடைக்கச் சொன்னதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் பரிதவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறும்போது, "தூத்துக்குடியில் எவ்வித முன் அறிவிப்புமின்றி கடைகளை அடைக்க சொல்லி காவல் துறையினர் மிரட்டுவது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் திட்டமிட்டபடி நாளை கடைகளை அடைக்க இருக்கும் நிலையில் இன்றைய வியாபாரத்திற்காக வாங்கிய பொருட்கள் அனைத்தும் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு வியாபாரிகளின் நலனுக்காக நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்பதை உணர்த்தும் நேரம் இது' - கமல் அறிவுறுத்தல்