தூத்துக்குடி: முறப்பநாடு அருகே இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியைப் பிடிக்க சென்றபோது, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தனிப்படை காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் தலைமைக்காவலராகப் பணிபுரிந்து வந்தவர் சுப்பிரமணியன். தனிப்படையில் இடம்பெற்றிருந்த இவர், ஸ்ரீவைகுண்டம் அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய துரை முத்து என்பவரை தேடிவந்தனர்.
இந்த நிலையில், துரைமுத்து முறப்பநாடு அருகே மணக்கரை பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தனிப்படை பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவரைப் பிடிப்பதற்குத் தனிப்படையினர் சென்றனர். அப்போது தனிப்படை பிரிவு காவல்துறையினருக்கும், துரைமுத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை துரை முத்து வீசினார்.
நாட்டு வெடிகுண்டு தனிப்படை காவலர் சுப்பிரமணியனின் தலையில் பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்த துரைமுத்து சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நெல்லை டவுண் கண்டியப்பேரியில் நடைபெற்ற கணேச பாண்டியன் என்பவர் கொலை வழக்கிலும் தொடர்புடையவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன், கடந்த 2017ஆம் ஆண்டில் தான் ஆழ்வார் திருநகரியில் பணியில் சேர்ந்துள்ளார். அவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட பண்டாரவிளை.