தூத்துக்குடி: திருச்செந்தூர் பாமக ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணனின் இல்ல நிகழ்ச்சியில் பாமகவின் மாநிலப் பொருளாளர் திலகபாமா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திலகபாமா, “ஈரோடு இடைத்தேர்தல் தேவையில்லாதது. ஏற்கனவே மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதியின் கட்சியில் ஒருவரை மீண்டும் தேர்ந்தெடுக்கலாம்.
இடைத்தேர்தல் என்பது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் தேர்தல். நதிநீர் இணைப்பை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விரைவில் போராட்டம் நடைபெறும். பெரம்பூர் விமான நிலையம் தொடர்பாக 200 நாட்களாகப் போராடி வரும் மக்களை யாரும் கண்டுகொள்வதில்லை.
திறம்பட ஆட்சி செய்யாமல் முதலமைச்சர் ஸ்டாலின், தனக்கான வாய்ப்பை வீணடித்து மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளார். கருணாநிதிக்குக் கடலில் பேனா சிலை வைப்பது தேவையில்லாதது. ஒரு தலைமுறையின் ஒழுக்கத்தை அழித்துச் சிதைத்தவர், கருணாநிதி. கருணாநிதி உண்மையிலேயே நல்ல எழுத்தாளர் என்றால், அவரது படைப்பு பேசும்.
தேர்தலுக்கு முன் மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறியவர்கள், தற்போது மதுவிலக்கு குறித்து பேசவில்லை. டாஸ்மாக் வருமானத்தை வைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். டாஸ்மாக் வருமானம் இல்லையென்றால், ஆட்சி நடத்த முடியாது என மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல், நேரில் பார்க்காமல் புரளியைக் கிளப்பக்கூடாது. இலங்கை பிரச்னையை சுயலாபத்திற்காகப் பேசுவதைத் தலைவர்கள் தவிர்க்க வேண்டும். இலங்கை பிரச்னையில் மதிப்புமிக்க தலைவர்கள் புரளி பேசுவது வருத்தம் அளிக்கிறது” என்றார்.
முன்னதாக நேற்று (பிப்.13) உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாகவும், இதனை அவர்களின் குடும்பத்தினர் அனுமதியுடனே தெரிவிக்கிறேன் எனவும் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "பிரபாகரன் உயிருடன் இல்லை, எங்களிடம் டிஎன்ஏ ஆதாரம் உள்ளது" - இலங்கை ராணுவம்