தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு அளித்தனர். அப்போது அங்கு வந்த ஜனநாயக உழைக்கும் பெண்கள் இயக்கம் சார்பில் சிறுமியை ஒய்வில்லாமல் வேலை வாங்கிவரும் நடிகை பானுப்பிரியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
![ஜனநாயக உழைக்கும் பெண்கள் இயக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3522278_thum.jpg)
பின்னர் அந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவி ராமராலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆந்திர மாநிலத்தில் நடிகை பானுப்பிரியாவின் வீட்டில் சந்தியா எனும் 13 வயது சிறுமி வேலை செய்து வந்தாள். வேலைக்கு சேர்ந்த நாள் முதல் ஓராண்டு வரை தொடர்ந்து ஓய்வில்லாமல் அச்சிறுமியை நடிகை பானுப்பிரியா வேலை வாங்கியுள்ளார். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரங்கள் கழுவுதல் உள்பட நாள் முழுவதும் அந்த சிறுமியை வேலை வாங்கியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் வேலைக்கு தகுந்த சம்பளம் வழங்காமலும், சிறுமியை சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய் அவரை வீட்டிற்கு அனுப்ப சொல்லிக் கேட்டும், வீட்டிற்கு அனுப்பாமல் வேலை வாங்கியிருக்கிறார். இதையடுத்து ஆந்திர மாநில குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பின் உதவியோடு சிறுமி அங்கிருந்து மீட்கப்பட்டாள். இந்தக் குற்றத்திற்காக ஆந்திர மாநிலத்தின் சாமல்கோட் காவல் நிலையத்தில் கொத்தடிமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின் கீழ் 13 வயது சிறுமியை வேலைக்கு அமர்த்தியது குற்றமாகும். ஆகவே நடிகை பானுப்பிரியாவை நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், சட்ட விதிமுறைகளின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.