தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதிக்குப்பட்ட தஸ்நேவிஸ் நகர் பகுதியில் வசிப்பவர் மதிக்குமார் (45). கூலித் தொழிலாளியான இவருக்கு அமுதா (43) என்ற மனைவியும், அஜித்குமார், அஜிஸ்குமார் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். அமுதா அருகில் உள்ள இரும்பு குடோன் ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலைக்குச் சென்றுவந்தார்.
அஜித்குமார் காதல் திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் திருப்பூரில் வசித்துவருகிறார். மற்றொரு மகனான அஜிஸ்குமார் ஓட்டப்பிடாரத்தில் காற்றாலை நிறுவனம் ஒன்றில் தங்கியிருந்து வேலை பார்த்துவருகிறார்.
இந்நிலையில் மதிக்குமார் தனது மனைவி நடத்தை மீது சந்தேகம் கொண்டு அவரை அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. இதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று மாலையும் இதேபோல் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மதிக்குமார் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இரவிலும், இன்று காலையும் மதிக்குமாரின் வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருடைய வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அப்போது தாழ்ப்பாள் எதுவும் போடாமல் கதவு சாத்தப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பார்க்கையில் வீட்டுக்குள் மதிக்குமார் தூக்கில் பிணமாகத் தொங்கினார். இதைத் தொடர்ந்து அமுதாவும் வாயில் ரத்தம் கசிந்த நிலையில் தரையில் இறந்துகிடந்தார்.
காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்தை அடுத்து அங்குவந்த தாளமுத்துநகர் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், இதுபற்றி தகவல் அறிந்த தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் சம்பவ இடத்துக்கு வந்து அக்கம்பக்கத்தினர், மதிக்குமாரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி அமுதாவை அடித்துக்கொலை செய்துவிட்டு மதிக்குமாரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.
தொடர்ந்து, இருவரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.