தூத்துக்குடியில் 46ஆவது வார்டு, பக்கிள்புரம் பங்களா தெரு, முனியசாமிபுரம் பகுதிகளில் 14 நாட்கள் ஆகியும் தண்ணீர் வரவில்லை. இதனால், பொதுமக்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், தண்ணீர் வராததைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நள்ளிரவில் திருச்செந்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதியினர், "எங்க ஏரியாவுல தண்ணி வந்து 14 நாளாச்சு. அரசு அலுவலர்கள்கிட்ட இதப்பத்தி பலமுறை சொன்னோம்; ஆனா அவங்க எங்க கோரிக்கைய கேக்ற மாதிரி தெரியல. கொழந்தைய வச்சுக்குட்டு ரொம்ப சிரமப்படுறோம்" என வேதனை தோய்ந்த குரலில் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இருந்த போதிலும் மாநகராட்சி அலுவலர்கள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனையடுத்து, முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.