தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
குறிப்பாக, தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை எனக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வருகை தந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், சண்டை போடுவதற்கு வந்துள்ளீர்களா என கேட்டதை தொடர்ந்து, இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, எந்த நிவாரண பொருட்களும் தங்களுக்கு வழங்க வேண்டாம் எனக் கூறி, அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறிச் சென்றனர்.
இது குறித்த அப்பகுதியைச் சார்ந்த விஜயன் என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தங்கள் பகுதிக்கு எந்த விதமான நிவாரணப் பொருட்களும் வரவில்லை, அரசு அதிகாரிகளோ அரசியல்வாதிகளும் வந்து ஆய்வு செய்யவும் இல்லை. மாநகராட்சி அலுவலகத்தில் மேயரிடம் கேட்டபோது, அவர் சரியான விளக்கம் அளிக்கவில்லை” எனவும், தொடர்ந்து தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து பேசிய போல்டன் புரம் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர், “மழை பெய்து நான்கு நாட்கள் ஆகியும் எந்த அதிகாரியும் எங்களைச் சந்திக்க வரவில்லை. போல்டன்புரம் பகுதி பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், புறக்கணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகின்றது. மேயரும் வரவில்லை, அறிவிக்கப்பட்ட அதிகாரியும் வரவில்லை, வேறு எந்த கட்சிக்காரர்களும் வரவில்லை.
அதைத் தெரிவிப்பதற்காக மேயரிடம் வந்தோம். அவர் எங்களை மெதுவா பேசும்படி மட்டும்தான் கூறினாரே தவிர, உதவிகள் செய்வதற்கு முன்வரவில்லை. அதனால், அவர்கள் தந்த உதவியே வேண்டாம் என்று புறம்தள்ளிவிட்டு வந்திருக்கிறோம்.
எங்களுடைய உரிமையை எங்களால் பெற்றுக் கொள்ள முடியும். எங்களால் சாப்பிட முடியும், தேவைப்படுபவர்களுக்கு எங்களால் வாங்கித் தர முடியும். தேங்கிக் கிடக்கும் தண்ணீரை மட்டும் நீங்கள் வெளியேற்றுங்கள். எந்த அதிகாரியாவது வந்து பார்த்தால்தானே தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பார்கள்.
யாரும் வந்து பார்கவில்லை. எந்த அதிகாரியும் வரவில்லை. எல்லாப் பகுதியிலும் தண்ணீர் தேங்கி இருப்பதை பார்வையிடும் அதிகாரிகள், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியை மட்டும் புறக்கணிப்பதற்கு காரணம் என்ன? அதைக் கேட்பதற்கு மேயரிடம் வந்தால், அவரும் எங்களைப் புறக்கணிக்கிறார். அதனாலே நாங்கள் அவர் அளித்த நிவாரண உதவிகளை புறந்தள்ளிவிட்டு வந்துள்ளோம்.
நாங்கள் யாருக்கும் ஆதரவானவர்களும் இல்லை, யாருக்கும் எதிர்ப்பானவர்களும் இல்லை. நான்கு அமைச்சர்கள் இருந்து, ஒருத்தர் கூட வந்து பார்க்கவில்லை. கவுன்சிலர்கள் அவர்களின் பகுதிகளைத்தான் பார்க்கின்றனர். எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. 3 நாட்கள் ஆகிவிட்டது. குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை. பாதிப்பு இல்லாத மக்களுக்கு உதவுகிறார்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தண்ணீரோ, உணவோ வந்து சேரவில்லை. மேயருடைய நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் அருகே உள்ள கந்தன் காலனியைச் சேர்ந்த மந்திர மூர்த்தி, “தூத்துக்குடியில் எந்த விதமான மீட்பு நடவடிக்கையும் நடைபெறவில்லை. தூத்துக்குடியில் தெற்கு பகுதியே அழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி உள்ளது. வீடுகளில் முதல் தளம் வரை தண்ணீர் வந்துவிட்டது. மக்களுக்கு உணவில்லை, மின்வசதி இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை.
எந்த விதமான அடிப்படை வசதியும் கிடையாது. அரசு மருத்துவமனை செயல்படவில்லை, போலீஸ் ஸ்டேஷன் செயல்படவில்லை, எந்த அரசு அதிகாரியும் இல்லை. யாரும் வந்து எந்த விதமான அடிப்படை வசதியும் செய்யவில்லை. நான்கு நாட்களாக மக்கள் மொட்டை மாடியில் தங்கிக் கொண்டு, உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். படகும் வரவில்லை, எந்த மீட்புக் குழுவும் வரவில்லை” எனத் தெரிவித்தார்.