தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் மின்சார வாரியம் சார்பாக உயரழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இன்று (ஜூலை 27) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி, விவசாய நிலங்களில் மின்சார உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கப்படுகிறது. இதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அலுவலர்கள் கோபுரம் அமைக்கும் பணியை கைவிடவில்லை.
விவசாய நிலங்கள் வழியே உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்பட யாரும் அனுமதி வழங்கவில்லை என்று கூறுகின்றனர். அப்படி என்றால் யாருடைய அனுமதியின் அடிப்படையில் மின்சார வாரியத்தினர் உயர் அழுத்த மின் கோபுரங்களை அத்துமீறி அமைத்து வருகின்றனர் என்பதை ஆட்சியர் தலையிட்டு, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர்.