கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைப்பதை கைவிட வலியுறுத்தி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் குரல் கொடுத்துவந்தனர். இந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்த இறுதியாண்டு மாணவர்களில் 11 பேரை கல்லூரி நிர்வாகம் அதிரடியாக ஆறு மாதம் இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவியர் கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் மீன்வளக் கல்லூரி சுயநிதி மீன்வள பாடப்பிரிவு தொடங்க எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் மீன்வளக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்க பொதுச்செயலாளர் மனோஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைக்கும் முடிவை மீன்வளத் துறை அமைச்சகம் கைவிட வேண்டும் என்றும் ஏற்கனவே மீன்வளக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு வெளிவரும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது மிகக் குறைவாகவே உள்ளது எனவும் தெரிவித்தார்.
புதிதாக சுயநிதி கல்லூரி பாடப்பிரிவை தொடங்குவதன் மூலம் மெரிட் மதிப்பெண்கள் பெற்று கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும் என்றும் கூறியுள்ளார்.
அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த மீன்வளக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 11 பேரை தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி நிர்வாகம் ஆறு மாத காலம் இடைநீக்கம் செய்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.