இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான கீதா ஜீவன், அம்மாவட்ட ஆணையர் ஜெயசீலனை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
"தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டு அம்மாவட்டத்தின் பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
ஸ்மார்ட் சிட்டி திட்ட விரிவாக்கப் பணிகளுக்காக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனை இடமும் திட்ட வரையறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பணிமனை செயல்படுவதற்கு மாற்று இடமாக தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே நான்கு ஏக்கர் நிலம் வழங்குமாறு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
புதிய பேருந்து நிலையம் அருகே பணிமனை அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் நான்கு ஏக்கர் நிலத்தினை வழங்கக் கூடாது. ஏனெனில் அந்த இடத்தில் தனியார் பேருந்து நிலையம் கொண்டு வரலாம் அல்லது கூடுதல் அரசு பேருந்துகளை நிறுத்த அந்த இடத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
பணிமனை என்பது ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்க வேண்டியது. ஆகவே அதற்கு புறநகர் பகுதியில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். தூத்துக்குடி மாநகராட்சியின் பல பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வெளியேற்றப்படாத சூழல் உள்ளது.
இதற்கு காரணம் மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கே. பருவமழைக்கு முன்னரே மாநகர பகுதிகளில் தாழ்வான பகுதியைக் கண்டறிந்து தண்ணீர் தேங்கினால் வெளியேற்றுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே திட்டமிடவில்லை. வெறும் மழைக்கு தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ள நிலையில் வெள்ளம் வந்ததுபோல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் " என்றார்.
மேலும் படிக்க : மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு!