கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி உள்பட தமிழ்நாட்டின் தென்பகுதி கடற்கரையோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபடியான மழைப்பொழிவு பதிவானது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையினால் நகர்ப்பகுதிகள் மட்டுமின்றி ஊரக பகுதிகளிலும் மழை வெள்ளம் பொதுமக்களை பெருமளவு பாதித்துள்ளது. முத்தையாபுரத்தை அடுத்துள்ள சூசை நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி மேடான இடத்தில் டெண்ட் அமைத்து தஞ்சம் புகுந்துள்ளனர்.
இடுப்பளவுக்கு தேங்கி நிற்கும் வெள்ளத்தால் வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டர், நாற்காலி, கட்டில் உள்ளிட்ட பொருள்கள் தண்ணீரில் மிதக்கின்றன. கனமழைக்கு அப்பகுதியில் சொள்ளமுத்து(வயது70) என்ற மூதாட்டி பலியாகியுள்ளார். நடக்க முடியாத நிலையில் இருந்த அவர், வீட்டில் புகுந்திருந்த தண்ணீரால் கட்டிலை விட்டு கீழே இறங்க முடியாமல் தவித்து வந்தார். இந்த நிலையில் கடுங்குளிர் காரணமாக நேற்று இரவு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகே உள்ள மேடான பகுதிக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகளை செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சூசை நகர் பகுதியில் 100 வீடுகளுக்கு மேல் உள்ளது. எங்களது பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து நிற்பதால் இரவு முழுவதும் யாருக்கும் தூக்கம் கிடையாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பரவி உள்ளது. தேங்கியுள்ள மழைநீர் வழிந்தோடுவதற்கு எங்கள் பகுதியில் வடிகால் இல்லை. வடிகால் அமைத்திருந்தால் எங்களது பகுதியில் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது. ஆகவே அரசு அலுவலர்கள் எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்து தரவேண்டும். கடுங்குளிரில் நடுங்கி இறந்த மூதாட்டியின் உடலை வீட்டில் வைத்து இறுதி சடங்கு செய்யக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் நலன்கருதி எங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையும் படிங்க: 108 ஆம்புலன்ஸ் தாமதம்: கைக்குழந்தையோடு குளுக்கோஸ் பாட்டிலை ஏந்தி பெற்றோர் காத்திருந்த அவலம்!