தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் உள்வட்டத்திற்குட்பட்ட 12 ஊராட்சிகள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்துடன் உள்ளன. நெல்லை மாவட்டத்திலிருந்த குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் தற்போது தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இளையரசனேந்தல் உள்வட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தாலும், ஊரக உள்ளாட்சி மட்டும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருப்பதால் தங்களுக்குப் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் கிடைப்பதில்லை என்றும் இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால், 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்க வலியுறுத்தியும் தொடர்ச்சியாக அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி வரையறை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மீண்டும் இளையரசனேந்தல் உள்வட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்கப்பட்டு பட்டியல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இளையரசனேந்தல் உள்வட்டத்தை தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வலியுறுத்தி 250க்கும் மேற்பட்டோர் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமையிலான காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: ராஜஸ்தானின் பத்ரா காடுகளில் கிடுகிடுவென பரவும் காட்டுத் தீ