தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் முதன்மை செயலாளர், கருவூல கணக்குத்துறை ஆணையர், தூத்துக்குடி மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை நேரில் சென்று இன்று (டிசம்பர் 4) ஆய்வு செய்தார்.
மேலும் கோரம்பள்ளம் பொதுப்பணித் துறை கண்மாய் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், நகரின் தாழ்வான பகுதிகளான பிரையன்ட் நகர், மடத்தூர் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சியின் ராட்சத மோட்டார்கள் கொண்டு அகற்றும் பணிகளையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து ரூ.60 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை 45பி -ல் அமைக்கப்பட்டுவரும் மழை வெள்ள நீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி பகுதியில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை கூடுதல் மோட்டார்களை பயன்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் எனவும் மழை நீர் வெளியேற்றும் பணிகளை கூடுதல் மோட்டார்களை கொண்டு விரைந்து வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கலோன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.