தூத்துக்குடி: தமிழ்நாட்டில் ஆன்மிக அரசியல் அமைய வேண்ட இந்து மக்கள் கட்சி சார்பில் வேல் வழிபாடு, இந்து மக்கள் கட்சியின் மாவட்ட மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் அரசியல் சூழல் மாறியிருக்கிறது. மக்கள் ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் அமையவேண்டும்.
எதிர்வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் தலைமையிலான ஆன்மிக அரசியல் அணி 234 தொகுதிகளிலும், வெற்றி பெற்று தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த எங்கள் கட்சி துணை நிற்கும். ஜனநாயகத்தின் எஜமானர்களாகிய வாக்காளர்கள் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். ஆன்மிக அரசியல் என்பது யாரையும் எதிர்த்துப் போட்டியிடுவது அல்ல.
அனைத்து நல்ல சக்திகளையும் அரவணைத்துச் செல்வது. எங்களைப் பொறுத்தவரை மத்தியில் மோடியையும், மாநிலத்தில் ரஜினியையும் ஆட்சியல் அமர்த்துவதுதான் எங்கள் திட்டம். நீண்ட காலமாக தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் வர வேண்டும் என இந்து மக்கள் கட்சி பணி செய்து வருகிறது. அதை ரஜினிகாந்த் முன்னெடுத்துள்ளதற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம்.
டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்தில், விவசாயிகள் பெயரில் பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக திமுக போன்ற கட்சிகள் அறிக்கை வெளியிட்டு வருகின்றன. இந்தப்போக்கை திமுக உள்ளிட்ட கட்சிகள் கைவிடவேண்டும்.
மேற்குவங்கத்தில் அரசியல் சாசனத்தை மீறி மம்தா வன்முறை அரசியலை கையாண்டுவருகிறார். இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வரும் மம்தாவின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்து அங்கு ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவரவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: திமுகவை கண்டித்து அர்ஜுன் சம்பத் ஆர்ப்பாட்டம்!