ராணிப்பேட்டை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த நவ 14ம் தேதி கங்குவா திரைப்படம் வெளியானது. இயக்குநர் சிவா இயக்கிய இப்படத்தில் நடிகர்கள் பாபி தியோல், திஷா பதானி, நட்டி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா திரைப்படம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியான நிலையில், எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கங்குவா குறித்து அதிகமாக மீம்ஸ் பதிவிட்டு வந்தனர். கங்குவா படத்தின் பின்னணி இசை இரைச்சலாக உள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வந்ததால், திரையரங்குகளில் இரைச்சல் பிரச்சனை சரி செய்யப்பட்டதாக படக்குழு விளக்கம் அளித்தது.
அதுமட்டுமின்றி படம் பார்த்த மக்கள் மத்தியில் முதல் அரை மணி நேரம் நன்றாக இல்லை என்ற கருத்து நிலவியது. இதனால் படத்திலிருந்து 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பரவலான வெற்றியை பெற்றது கங்குவா.
இதையும் படிங்க : 'கங்குவா' திஷா பதானி குறித்த சர்ச்சை கருத்து; நேகா ஞானவேல்ராஜா விளக்கம்!
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 108 திவ்ய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. இங்கு, யோக நரசிம்மர் தியான நிலையில் இருப்பது தனி சிறப்பாகும். இதனால், தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வர்.
இந்நிலையில் இன்று (நவ 20) காலை நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா ஆகியோர் சாமி தரிசனம் செய்ய இங்கு வருகை தந்தனர். ரோப் கார் மூலம் பயணித்து மலை மீது சென்ற நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவாவிற்கு கோயில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து இருவரும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்த ரசிகர்கள் சூர்யா மற்றும் சிவாவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்