தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சன்னதி புதுக்குடி கிராமத்தில் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிழல் குடை கட்டும் பணிக்காக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "மாநிலத்தில் இந்த ஆண்டு 3 கால்நடை கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. 40 கால்நடை கிளை நிலையங்களும், 25 கால்நடை நிலையங்களை மருந்தகங்களாகவும், 5 கால்நடை மருத்துவமனையை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு கால்நடை கிளை நிலையங்களும் தலா நான்கு லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கால்நடைகளுக்கு தேவையான அனைத்துப் பொருள்களும் வழங்கப்படும். கறவைப் பசுக்களுக்கு தேவையான நான்கு வகை சினை ஊசிகள் போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது தொகுதிக்கு ஒரு அம்மா ஆம்புலன்ஸ் வழங்க முதலமைச்சரிடம் பரிந்துரைத்துள்ளோம். விரைவில் ஒவ்வொரு தொகுதிக்கும் அம்மா ஆம்புலன்ஸ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். திருநெல்வேலி மாவட்டத்துக்கு 3 கால்நடை கிளை நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு கால்நடை மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் முதலமைச்சர் வெளியிடுவார்.
அரசு கேபிள் டிவியை பொறுத்தவரை இதுவரை 30 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 10 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: விஜயதசமியன்று மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தொடக்க கல்வித்துறை இயக்குநர் உத்தரவு