தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு ஏற்றுமதிக்காக கொண்டு வரப்படும் சரக்கு பெட்டகங்களை நேரடியாக துறைமுகத்துக்குள் அனுமதிக்கும் சேவை தொடக்க நிகழ்ச்சி நேற்று (அக்.27) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கப்பல்துறை செயலாளர் சன்ஜீவ் ரன்ஜன் முன்னிலை வகித்தார். கப்பல்துறை, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணைமந்திரி மன்சுக் மண்டவியா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு காணொளி காட்சி மூலம் சேவையை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது, ஏற்றுமதி சரக்கு பெட்டகங்கள் துறைமுகத்துக்குள் நேரடியாக அனுமதிக்கும் சேவையை அமல்படுத்தி, தளவாட செலவினங்களை குறைப்பதன் மூலம் அதிகப்படியான சரக்கு பெட்டகங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றுமதியாளர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த சேவையின் மூலம் அதிக திறன், குறைந்த கட்டணம், ஏற்றுமதிக்கான சரக்கு பெட்டகங்களின் குறைந்த காத்திருப்பு நேரம், வேகமான சேவை போன்ற நன்மைகள் மூலம் நம் நாட்டின் ஏற்றுமதி சரக்குகளுக்கு சர்வதேச வர்த்தகத்தில் அதிகவாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கப்பல்துறை செயலாளர் சன்ஜீவ் ரன்ஜன் பேசுகையில், தொழில்நுட்ப உட்கட்டமைப்புகள் இந்திய துறைமுகங்களில் அமல்படுத்துவதன் மூலம் நம் நாட்டின் அனைத்து துறைமுகங்களும் உலகதரம் வாய்ந்த துறைமுகங்களாக திகழ்ந்து, கப்பல்துறை அமைச்சகத்தின் கடல்சார் தொலைநோக்கு 2020-30 குறிக்கோளை அடைவதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் லாரிகள் நிறுத்தும் முனையத்தில் மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தால் இயக்கப்படும் ஏற்றுமதி சரக்கு பெட்டகங்களை நேரடியாக கொண்டு செல்வதற்கான சேவை மாதம் ஒன்றுக்கு 18 ஆயிரம் சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டது. இந்திய சுங்கத்துறை மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவன அலுவலகத்தில் ஏற்றுமதி ஆணையை ஒரே இடத்தில் எந்தவித தடையும் இன்றி வழங்கும்.
சரக்கு பெட்டகங்களுக்கு துறைமுகத்துக்குள் நேரடி அனுமதி வசதி தொடங்குவதற்கு முன்பு தொழிற்சாலைகளில் இருந்து ஏற்றுமதிக்காக வரும் சரக்கு பெட்டகங்கள் அனைத்தும் தூத்துக்குடியில் உள்ள 15 சரக்கு பெட்டக நிலையங்களுக்கோ அல்லது சர்வதேச சரக்கு பெட்டக நிலையத்துக்கோ எடுத்து செல்லப்பட்டன.
அங்கு சரக்கு பெட்டகங்களை பரிசோதனை முடித்து துறைமுகத்துக்கு கொண்டு செல்ல காலதாமதம் ஆனது. தற்போது, இந்த நேரடி சேவை தொடங்கப்பட்டு இருப்பதால், சரக்கு பெட்டகங்களை தங்களது தொழிற்சாலையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ள சரக்கு பெட்டகங்கள் எந்த ஒரு சரக்கு பெட்டக நிலையங்களுக்கும் செல்லாமல் 24 மணிநேரமும் இந்த சேவையின் மூலம் துறைமுகத்துக்குள் நேரடியாக செல்ல முடியும். இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு நேரமும், செலவும் குறையும் வகையில் செயல்படும்.
இதையும் படிங்க:தூத்துக்குடி- மாலத்தீவு இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்: பாரம்பரிய தோணி தொழில் பாதிக்கும் அபாயம்!