தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு மருத்துவ உதவிகள் வழங்குவதற்காக விருதுநகர், மதுரை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மருத்துவ குழுக்கள் வர உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மழை வெள்ளம் சூழ்ந்தது. கடந்த ஆறு தினங்களாக சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையை இன்று (டிச. 22) மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் 190 நடமாடும் மருத்துவம் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில், மருத்துவர் உள்ளிட்ட 4 பணியாளர்கள் உள்ளனர்.
நேற்று மட்டும் ஒரு மருத்துவக் குழுவில் 100 பேர் பயனடைந்தனர். மேலும், பொதுவாக மருத்துவக் குழுவில் 158 பேர் பயனடைந்து வருகின்றனர். நேற்று மட்டும் 2,882 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 67 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றனர். மேலும் மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து செவிலியர்கள் தூத்துக்குடி வர உள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம் தாழ்வாக உள்ளதால், இங்கு மழைநீர் புகுந்துள்ளது. இருந்தபோதும், இங்கிருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பாதுகாக்கப்பட்டு மின் மோட்டார் மூலமாக அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருதய துறையில் மட்டும் இயந்திரம் பெரிய அளவில் சேதமாகி உள்ளது. மீண்டும் இயங்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேங்கிய மழைநீர், மோட்டார் முலம் அகற்றப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால், மருத்துவ முகாம் எண்ணிக்கை தனியார் சேவையை பயன்படுத்த பேசிவருகிறோம். காப்பீடு திட்டம் உள்ள பெரிய மருத்துவமனை சார்பில் ஞாயிற்று கிழமைகளில் முகாம் நடத்தப்பட உள்ளது. உயிர் பாதிப்பு இல்லா வகையில், மருத்துவமனை செயல்பாடு சிறப்பாக உள்ளது.
ஏராளமான மோட்டார்கள் மூலம் வெள்ள நீர் வடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறப்பு விகிதம் குறித்த விவரங்கள், பின்னர் தெரிவிக்கப்படும். மேலும், குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பானதால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி மக்கள் காய்ச்சிய குடிநீரை குடிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் 5 நாட்களுக்கு பிறகு ரயில் சேவை...! பயணிகள் மகிழ்ச்சி!