தூத்துக்குடி கோவில்பட்டி விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் மஞ்சா வர்மக்கலை தற்காப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கோவில்பட்டி கிளை சார்பில் 17ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஒருவார வர்மக்கலை இலவச பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. மஞ்சா வர்மக்கலை நிறுவனர் ராஜேந்திரன் விழாவிற்கு தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்துகொண்டு இலவச பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், "இளைஞர்கள், மாணவர்கள் அறிந்து கொள்வதற்கும் பயிற்சி பெறுவதற்கும் ஏதுவாக பாடத்திட்டத்தில் சேர்க்க அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிச்சயமாக பரிசீலிக்கப்படும். இணையதள பயணச்சீட்டு நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இரண்டு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது தீபாவளி விரைவாக வருவதால் அதற்குள் அமல்படுத்த முடியாவிட்டாலும் விரைவில் அமல்படுத்தப்படும்.
நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் சந்திரசேகர்கூட அரசு, திரைத் துறையைக் காப்பாற்ற நல்ல முயற்சி எடுத்துள்ளார் என்று பாராட்டியுள்ளார். இது நடைமுறைக்கு வரும்போது தமிழ்நாட்டில் திரைத் தொழில் பெரிய தொழிலாளாக மாறும்.
இணையதளத்தில் புதிய திரைப்படங்கள் வருவதை தடுக்க உள் துறை மூலமாக கண்காணிக்க ஏற்கனவே கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்த் திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் வெளியிடப்படுகிறது. எனவே அங்கிருந்து கூட புதிய திரைப்படங்கள் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. அதைக்கூட எந்த முறையில் கட்டுப்படுத்தலாம் என்று ஆலோசனை நடைபெற்றுவருகிறது.
இதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் சாத்தியமாகும், அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். முடிந்தவரை கட்டுப்படுத்தப்படும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கட்டுப்படுத்தப்பட்டது என்ற நிலை இருக்கும்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணிகள் கிடப்பில் ஏதும் போடவில்லை. 50.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எந்தத் தலைவருக்கும் இந்தியாவில் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா நினைவகம் ஆலயத்தை போல இந்தியாவில் எந்தத் தலைவருக்கும் இல்லாத அளவிற்கு ஃபீனிக்ஸ் பறவையின் வடிவில் அமைக்கப்படும்" என்றார்.
மேலும் படிக்க : அம்மா பூங்காவில் இறங்கு பந்து விளையாடி அசத்திய முதலமைச்சர்...!