தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூரில் உள்ள இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு 128 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ''முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி என்பதால்தான் இன்றைக்கு காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளார். சாமானிய மக்களின் உணர்வினைப் புரிந்துகொண்டு மகத்தான அறிவிப்பை வெளியிட்டு, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முயற்சி செய்துவருகிறார். ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அந்தப் பிரச்னைக்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வரும் 22ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெறும் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டு அரசின் புதிய திட்ட பணிகளைத் தொடங்கி வைப்பதோடு ஏற்கனவே முடிவுபெற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைக்கவுள்ளார். தூத்துக்குடி பகுதியில் தொழில்வளம் பெருக வேண்டும் என்பதற்காகச் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெட்ரோலியோ சுத்திகரிப்பு ஆலை நிறுவுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவுவின் உதவியாளர் ஐயப்பன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தற்பொழுது விசாரணை நடைபெற்று வருவதால் அது பற்றிய தகவல்களைக் கூற முடியாது. ஐயப்பன் தனது உதவியாளரா, இல்லையா என்பதை அப்பாவு தான் விளக்க வேண்டும். இந்த முறைகேட்டில் எந்தளவுக்கு சம்பந்தபட்டுள்ளார்கள் என்பது விசாரணை முடிவில் தெரியவரும்'' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘அரசின் திட்டங்களைக் குறை கூறுவதே ஸ்டாலினுக்கு வேலையா போச்சு’ - வெல்லமண்டி நடராஜன் சாடல்