மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அதிமுக சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பி.சின்னப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தூத்துக்குடி மாவட்ட அதிமுக கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அதிமுக கழக செய்தி தொடர்பாளர் ஜிவி மார்க்கண்டேயனுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று அவர் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் மார்க்கண்டேயனின் ஆதரவாளர்கள் இன்று விளாத்திகுளத்தில் ஒன்றுகூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மார்க்கண்டேயன், அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பொறுப்பில் இருக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் எனது கருத்துக்கு தலைமை செவிசாய்க்கவில்லை. தற்போது தேர்தலில் 3ம் இடம்தான் கிடைக்கும். எனவே கழகத்தின் செய்தி தொடர்பாளர் பதவியை நான் ராஜினாமா செய்து விட்டேன். ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை தவறாக வழிநடத்தி விட்டார். அமைச்சர் கடம்பூர் ராஜூ, திமுகவை வெற்றி பெற வைக்க முயற்சி செய்கிறார். இதற்காக கனிமொழியிடம் கையூட்டு பெற்றுள்ளார் என்று பகீர் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.