தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகளில் உட்கட்டமைப்பு திட்ட நிதி 2019-20இன் கீழ் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு வீரவாஞ்சி நகர் ஏகேஎஸ் தியேட்டர் சாலை முதல் பாரதி நகர் நடராஜபுரம் தெரு வரை உள்ள 14.34 கிலோ மீட்டருக்கான சாலைப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன், மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் சத்யா, நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, "யார் எதைப் பேசினாலும் நேர்மறை, எதிர்மறை என இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக பெரியார் அவமதிப்பு என்ற கருத்தில் நான் பேசவில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறுகிறார். அவர் பேசியது சரிதான் என்று அவர் சொன்னால் நாம் விவாதமாக எடுத்துக் கொள்ளலாம். அவருடைய பேச்சில் ஒரு பாதியை மட்டும் தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும், அதிமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை. பொன். ராதாகிருஷ்ணன் தனிப்பட்ட ஒரு கருத்தை சொன்னாரே தவிர கூட்டணி பற்றி எதுவும் சொல்லவில்லை. ஊடக நிறுவனங்கள் தங்களது செய்தியாளர்களின் விபரங்களை அரசுக்குத் தரவேண்டும். இதுகுறித்து பலமுறை அரசு வலியுறுத்தியுள்ளது. அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் போலியான செய்தியாளர்களை களைவதற்கு அரசு முனைப்புடன் செயல்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'காங்கிரஸை திமுகவினர் இதைவிட கேவலப்படுத்த முடியாது' - அமைச்சர் ஜெயக்குமார்