தமிழ்நாட்டில் தேர்தல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கோவில்பட்டி அருகே கயத்தார் ஒன்றியத்துக்கு உள்பட்ட வடக்கு சுப்பிரமணியபுரம், தெற்கு சுப்ரமணியபுரம், புதுக்கோட்டை இந்திரா நகர், செட்டியார் தெரு, மூப்பனார் தெரு, நாடார் தெரு, தேவர் தெற்குதெரு, தேவர் காலனி ஆகிய பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
இவருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் வரவேற்பு அளித்தனர். இதில் கயத்தாறு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வ குமார், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், கடம்பூர் மாரி துரை, கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டன கருப்பசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இவர் தலைமையில், 50க்கும் மேற்பட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர், அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், “டிடிவி தினகரனை, கோவில்பட்டி தொகுதியில், முன்பு நிற்கச் சொல்லி வேண்டுகோள் வைத்தேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்கு பின், 18 எம்எல்ஏக்களை கூட்டிக் கொண்டு, கவர்னரை பார்க்க சென்ற போது, நாங்கள் இது சரியான அணுகுமுறை இல்லை எனக் கூறினோம். இதனால் 18 எம்எல்ஏக்கள் வாழ்க்கை முடிந்துவிடும்.
அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தளவாய்சுந்தரமும், நானும் வேண்டுகோளை வைத்தோம். இந்த வேண்டுகோளை அவர் ஏற்றிருந்தால், இப்போது அந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் பெற்றிருக்க மாட்டார்கள், ஆட்சிக்கு பல சிக்கல்கள் இடையூர் களங்கம் விளைவித்த அவப்பெயர் தினகரனுக்கு வந்திருக்காது.
என்னுடைய வேண்டுகோளை தினகரன் ஏற்றிருந்தால் தினகரனுடைய நிலையே வேறு. இந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. எங்கள் வேண்டுகோளை ஏற்று, உடன் இருந்தவர்களின் தவறான வேண்டுகோளை ஏற்காமல் இருந்திருந்தால் அவருக்கு எப்போதும் நல்லது நடந்திருக்கும். தேர்தல் முடிந்த பின்பு அவருக்கு ஒரு வேண்டுகோளை வைப்போம். திரும்பவும் கேட்கும் காலம் கடந்திடவில்லை எங்களது வேண்டுகோள் எப்பவுமே நல்லது நடக்க வேண்டிய வேண்டுகோள்.
தினகரன் மட்டுமல்ல, முக ஸ்டாலின் வேண்டுமானாலும் கோவில்பட்டி தொகுதியில் இருக்கட்டும் என கூறினேன். தொகுதி மக்கள் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை, தொகுதி மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, நான் ஆற்றிய பணிகள் எனக்கு வெற்றியை தரும். இதில் நான் யாரைப் பார்த்து பயப்பட வேண்டும். மக்கள் முடிவு செய்யப் போகிறார்கள் யார் வேண்டும் என்று” எனக் கூறினார்.
சசிகலா தற்போது பல்வேறு கோயிலில் தரிசனம் செய்து வருவது குறித்து கேள்விக்கு:
“சசிகலா பாவம், 4 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்து வந்து, மன அமைதிக்காக தற்போது கோயில் கோயிலாக போய் வருகின்றனர். அவர் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்றும், அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று சொன்னால், இந்த வெற்றிச் சின்னமான இரட்டை இலைக்கு தான் வாக்கு அளிக்க வேண்டும்’ என்ற நிலைப்பாட்டை தான் சசிகலா கூறிவிட்டார்.
கோயிலுக்குச் சென்று வரும் அவர், ஏதாவது இடத்தில் இந்த சின்னத்துக்கு தான் வாக்களியுங்கள் என கூறி உள்ளாரா, தெளிவாக கூறிவிட்டார் ‘ஜெயலலிதாவின் ஆட்சிக்கு துரோகம் செய்யவில்லை, துரோகம் செய்ய விரும்பவில்லை, ஜெயலலிதாவின் ஆத்மாவுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும், திமுக வரக்கூடாது’ என்றும் தான் அறிக்கை வெளியிட்டார்.
இரட்டை இலைக்கு ஓட்டு போடக்கூடாது, ஜெயலலிதாவின் ஆட்சி தொடர கூடாது என ஒரு காலமும் அவர் சொல்லவே இல்லை. அவர் செல்லும் இடங்களுக்குச் சென்று, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அதை வாக்கு வங்கியாக மாற்றலாம் என கோயிலுக்கு செல்லும் இடத்தில் கூட்டத்தை திரட்டுகின்றனர். சசிகலா மனசாட்சிப்படி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போட சொன்னார் என்பது தான் எங்களுடைய கருத்து” என்றார்.
இதையும் படிங்க: காயம்பட்ட இளைஞருக்கு தனது வாகனத்தை அளித்து உதவிய தமிழிசை சௌந்தரராஜன்