தூத்துக்குடி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்திலுள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பெரிய காட்டன் சாலையில் உள்ள காதி விற்பனை அங்காடியில் கதர் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கீதாஜீவன், “கதர் உற்பத்தி பொருட்களை வாங்குவதன் மூலம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். தூத்துக்குடியில் கடந்த ஆண்டு 26 லட்சம் ரூபாய்க்கு கதர் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்றார். இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள வில்லமரத்துப்பட்டி கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கிராமசபை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பெண்கள் சுயமாக முன்னேற கைத்தொழிலைக் கற்று கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகளை திமுக அரசு ஏற்படுத்தி தந்து உள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்பு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை நிராகரிப்பட்டவர்கள் முறையீடு செய்து உள்ளனர். பரிசீலனையில் உள்ள பெண்களுக்கு கட்டாயம் உரிமைத்தொகை கிடைக்கும். நிராகரிக்கப்பட்டவர்களுக்கு உரிய விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது. தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்.
கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்து உள்ள உணவை உண்ன வேண்டும். காய்ச்சல் தொடர்ந்து இருந்தால், மருத்துவமனைக்கு உடனடியாகச் செல்லுங்கள், அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது” என்றார். இதனைத் தொடர்ந்து, இலவச வீட்டு மனை, பட்டா வேளாண் இடு பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதையும் படிங்க:கிராம சபைக் கூட்டத்தில் துர்கா ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டிய அமைச்சர் மெய்யநாதன்!