தூத்துக்குடி: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில், கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதி கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், பல்வேறு மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். இதனை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன், சாத்தான்குளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாகச் சென்று, ஆய்வு செய்துள்ளார்.
அப்போது சாத்தான்குளம் அருகே வடக்கு பன்னம்பாறை பகுதியில், இதுவரை பேருந்து சேவை இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆய்வுக்காக வந்த அமைச்சரிடம், அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு புதிய பேருந்து சேவையை இயக்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில், அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்த அமைச்சர் சி.வி.கணேசன், உடனடியாக புதிய பேருந்து சேவையை இயக்குமாறு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.
அதன் பேரில், உடனடியாக டவுன் பஸ் ஒன்று வரவழைக்கப்பட்டு, வடக்கு பன்னம்பாறை முதல் உடன்குடி வாயிலாகச் செல்லும் வழித்தடத்தில் சுமார் 10 கிராம மக்கள் பயன்பெறும் வகையில், இந்த பேருந்து சேவையை அமைச்சர் சி.வி கணேசன் இன்று (டிச.30) துவக்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல், பேருந்தில் ஏறி பேருந்தைச் சிறிது தூரம் ஓட்டி, பேருந்தின் முதல் சேவையைத் துவக்கி வைத்தார்.
இதையும் படிங்க: கணைய புற்றுநோய்; நுண் துளை தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சை… அசத்தும் அரசு தஞ்சை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள்..