தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பஜார் பகுதிக்குள் நேற்று முன்தினம் மிளா (கடமான்) ஒன்று புகுந்தது.இந்த மிளாவை வன அலுவலர்கள் பிடிக்கும் போது இறந்துவிட்டது. வன அலுவலர்கள் மிளாவை சுருக்கு கயிறு போட்டு பிடித்ததால் தான் இறந்துவிட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் 3 பேரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "திருச்செந்தூர் தாலுகா, உடன்குடி கிராமத்தில் கடமான் மீட்பு பணியின் போது இதய தசை பிடிப்பு மற்றும் அதிர்ச்சியினால் கடமான் இறந்ததாக உடற்கூறு பரிசோதனை அறிக்கையில் தெரிகிறது.
சம்பவ இடத்திற்கு சென்று வனச்சரவு அலுவலர் மற்றும் மீட்பு பணியின் போது உடன் இருந்த களப்பணியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, மாவட்ட வன அலுவலரிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை. மேலும் அவர்கள் நிலையான நெறிமுறைகளையும் வன உயிரின மீட்பு முறைகளையும் பின்பற்றவில்லை. அவர்கள் கடமானின் கழுத்தில் கயிற்றை மாட்டியதால் அதிர்ச்சியடைந்தது. பின் வனப்பகுதியில் விடப்பட்ட போது இறந்தது.
சம்பவம் காரணமாக நாசரேத் பிரிவு வனவர் ஆனந்த், கச்சினா விளை பீட் வனக்காப்பாளர் கந்தசாமி, காயாமொழி பீட் வனக்காவலர் ஜோசுவா ஆகிய மூன்று பணியாளர்களும் தற்காலிக பணி நீக்கம் செய்யபட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கனிமொழி எம்பி வீட்டில் புகுந்த மர்ம நபர்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?