நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி, ஊரடங்கு அமலில் உள்ளது. தொடர்ந்து கடந்த மே 4ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்த பிற மாநில தொழிலாளர்களை மத்திய, மாநில அரசுகள் சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், தமிழ்நாட்டில், பிற மாநில தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்தின் பெயரில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க, மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்களை நியமித்து அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும், 8,700 வடமாநில தொழிலாளர்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களில் 4,170 பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்த நிலையில், முதல் கட்டமாக பிகாரைச் சேர்ந்த 265 தொழிலாளர்கள் நெல்லையில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயிலில் நேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தூத்துக்குடியிலுள்ள எஸ்.இ.பி.சி. தனியார் மின் உற்பத்தி ஆலையில் பணியாற்றி வந்த இவர்கள், முதலில் 10 சிறப்புப் பேருந்துகள் மூலம் தூத்துக்குடி புதியத் துறைமுகம் பகுதியிலிருந்து நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று வழியனுப்பி வைத்தார்.
பேருந்துக்கு 30 பேர் வீதம் சமூக இடைவெளியுடன் அழைத்து செல்லப்பட்ட இவர்கள் அனைவருக்கும் பயணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் பேருந்து ஒன்றுக்கு இரண்டு காவலர்கள் வீதம் 20 காவலர்கள், இரண்டு உதவி ஆய்வாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்களும் இவர்களுடன் நெல்லை சென்றனர்.
இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அடுத்த கட்டமாக இன்று 140 வடமாநில தொழிலாளர்கள் ஜார்கண்ட் மாநிலத்துக்கும், நாளை 240 தொழிலாளர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சொந்த ஊருக்கு செல்லும் கூடங்குளம் அணு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள்