தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக வெங்காய விலை உச்சத்தைத் தொட்டுவருகிறது. உயர்ந்துவரும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமுதாய அமைப்புகளும் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில் வெங்காய விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பூமயில் தலைமையில் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சின்ன வெங்காயத்தை மாலையாக அணிந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து வெங்காய விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து ஒப்பாரிவைத்தனர்.
மத்திய, மாநில அரசுகள் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், வெங்காய பதுக்கலைத் தடைசெய்து விலை குறைவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் வெங்காய விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 150 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ 120 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.