கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற காரணங்களுக்காக சாலையில் உலாவுவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு கூட்டம் கூடுவதை தவிர்த்து முக்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிய முறையில் நடத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமாருக்கும், திருப்புலானி ஊரைச் சேர்ந்த ராஜலட்சுமிக்கும், தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்களது திருமணம் அப்பகுதியில் உள்ள அம்மன் கோயில் முக்கிய உறவினர்களின் முன்னிலையில் மிக எளிமையாக நடைபெற்றது.
திருமணத்தின்போது மணமக்கள் முகக்கவசங்கள் அணிந்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு வந்திருந்த முக்கிய உறவினர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடித்ததோடு, முகக்கவசங்கள் அணிந்து கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மணமக்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெகு விமரிசையாக நடைபெற இருந்த எங்களது திருமணம் ஊரடங்கு உத்தரவின் காரணமாக எளிய முறையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாத தேவைக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச அரிசி மற்றும் உணவுப் பொருள்களை வாங்கிச் செல்வதற்காக ரேஷன் கடையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்கள் பெற்றுக் கொண்டோம்” என்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் மேலும் 6 பேருக்கு கரோனா: பாதிப்பு 17 ஆக உயர்வு