63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார், இறைவன் அருளால் அதிமதுர மாங்கனியைப் பெற்று அதை தனது கணவருக்கு கொடுத்ததாகக் கூறப்படும் நாளே மாங்கனித் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள 63 நாயன்மார்கள் சன்னதியில் மாங்கனி விழா நடைபெற்றது.
இதில் 63 நாயன்மார்கள் சன்னதியில் உள்ள காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகளுடன் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றன. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதமாக மாங்கனிகள் வழங்கப்பட்டன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.