தூத்துக்குடி: குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது. சுமார் 1 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், சிறப்பு உதவி ஆய்வாளர் அருள் மோசஸ், தலைமை காவலர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று (அக் 1), ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் மேலபுதுக்குடி பகுதியைச் சேர்ந்த சுடலைமகன் முருகேசன் (62) என்பதும் அவர் சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: 'சதுரங்க வேட்டை' பட பாணியை மிஞ்சிய பண மோசடி.. நூதன திருட்டில் ஈடுபட்டவர் சிக்கியது எப்படி?
பின்னர், உடனடியாக குரும்பூர் காவல் நிலைய போலீசார் முருகேசனை கைது செய்தனர். அவரிடமிருந்த ரூபாய் 1,05,000/- மதிப்புள்ள 2,948 வெளிமாநில லாட்டரி சீட்டுகள், இருசக்கர வாகனம், ஒரு செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சில்லரை வாங்குவது போல் நடித்து ரூ.6 லட்சம் தங்கம் அபேஸ்! வீடியோ வைரல்!