தூத்துக்குடியில் மள்ளர் பேராயம் தலைவர் இரா. சுபாசினி மள்ளத்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் வாழும் 13 கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் உள்ள மள்ளர் சமூகத்தினர், தேவேந்திர குல சமூகத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவு சாதியினரை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றி தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் இணைத்து அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தேர்தலை புறக்கணித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி புரியும் (திமுக,அதிமுக) திராவிட கட்சிகள் மள்ளர் சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலதாமதப்படுத்தியதன் விளைவுதான் இன்று நாங்குநேரி சட்டப்பேரவையின் இடைத் தேர்தல் புறக்கணிப்பில் வந்து நிற்கிறது.
எங்கள் கருப்புக்கொடிப் போராட்டத்தையும் தேர்தல் புறக்கணிப்பு அரசியலையும் முன்னெடுத்து வரும் நாங்குநேரி பகுதிவாழ் மள்ளர் சமூகத்தினருக்கும், நெறிப்படுத்தி வழிநடத்தும் பருத்தித்கோட்டை நாட்டார் சங்கத்தினருக்கும் மள்ளர் பேராயம் முழு ஆதரவையும் வழங்கி பாதுகாப்பு அரணாக இருக்கும். நாங்குநேரி மள்ளர் சமூக மக்களின் கருப்புக்கொடிப் போராட்டத்தையும், பட்டியல் வெளியேற்றம், அரசாணை கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து தமிழர் குடிகளும், தமிழர் அமைப்புகளும் தமது ஆதரவை வழங்க வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க: 50 பேர் மீது வழக்குப் போடுவது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? - திருநாவுக்கரசர்
மேலும் பார்க்க: 1973ஆம் ஆண்டே கண்டறியப்பட்ட கீழடி - வரலாற்று ஆசிரியரின் சுவாரஸ்ய தகவல்கள்