தூத்துக்குடி: தெற்கு சங்கரப்பேரியைச் சேர்ந்தவர் சக்திவேல் (55). இவர் அப்பகுதியில் சோழன் என்ற பெயரில் லாரி செட் வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள கருப்பசாமி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக சக்திவேல் கைது செய்ப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 16) மாலை லாரி செட் முன்பு சக்திவேல் உட்கார்ந்திருந்தபோது 2 டூவீலரில் சென்ற 4 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சக்திவேலை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். இந்த தாக்குதலில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை: இதுவரை எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் தெரியுமா?
பின்னர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, இந்த கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்தார். லாரி செட் உரிமையாளர் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனத்தில் தப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் உடனடியாக அருகே உள்ள மற்ற மாவட்டங்களுக்கு தூத்துக்குடி போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக்குச் சென்று திரும்பும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வத்திராயிருப்பு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் இரண்டு டூவீலரில் சென்ற ஐந்து பேரை போலீசார் நிறுத்தினர். இதனை விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் சுதாரித்தபோது 5 பேரில் இருவர் ஒரு இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி உள்ளார். மற்ற மூவரும் இருசக்கர வாகனத்துடன் பிடிபட்டுள்ளனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி லாரி செட் உரிமையாளர் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதும், சதுரகிரி சென்று தப்ப முயன்றதும் தெரிய வந்துள்ளது.
பின்னர், தூத்துக்குடி போலீசாருக்கு வத்திராயிருப்பு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். போலீசாரிடம் பிடிபட்ட மூவரில் ஒருவர் 17 வயதே ஆன சிறுவர் ஆவார். பின்னர், சிறுவன் உள்பட மூவரும் தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் தப்பிச் சென்ற 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.