லாரிகளில் ஏற்றப்படும் தீப்பெட்டி பண்டல்களுக்கான ஏற்று கூலி, இறக்குக் கூலியை சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்களே வழங்க வலியுறுத்தி கடந்த 21ஆம் தேதி முதல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றில் உள்ள லாரி உரிமையாளர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தூத்துக்குடி கண்டெய்னர் மற்றும் டிரெய்லர் அசோசியேஷன் ஆகியவை ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில் இன்று கோவில்பட்டியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் லாரி உரிமையாளர்கள் சங்கம், தீப்பெட்டி புக்கிங் அசோசியேஷன் சங்கம், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வரும் 1ஆம் தேதி முதல் லாரிகளில் தீப்பெட்டி பண்டல்களை ஏற்றுவதற்கான ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி, மாமூல் மற்றும் குடோன் வாடகை ஆகிய எந்த செலவையும் லாரி உரிமையாளர்கள் கொடுக்கத் தேவையில்லை.
கூலி உள்ளிட்ட செலவுகளை தீப்பெட்டி புக்கிங் அசோசியேஷன் ஏற்றுக்கொள்ளும் எனவும், லாரி உரிமையாளர் இனிமேல் ஆஃபிஸ் கமிஷன் மட்டும் கொடுத்தால் போதும் என்றும், லாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகைப்படி லோடு ஏற்றப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும், திங்கட்கிழமை முதல் வழக்கம்போல் கோவில்பட்டியிலிருந்து தீப்பெட்டி பண்டல்கள் லாரிகளில் ஏற்றப்படும் என சங்க நிர்வாகிகள் கூறினர்.
லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கூறுகையில்,'தீப்பெட்டி உற்பத்தியாளர்களிடம் கலந்து பேசியதில் எடுக்கப்பட்ட முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எனவே, எங்களது போராட்டத்தை கைவிட்டு, திங்கட்கிழமை முதல் அனைத்து லாரிகளிலும் தீப்பெட்டி லோடுகள் ஏற்றப்படும்'என்றார்.