தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் (26). இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கடனுக்கு ஈடாக சுரேஷின் மோட்டார் சைக்கிள் முத்துவேலிடம் கொடுக்கப்பட்டது. பின்னர் சுரேஷ், பணத்தை கொடுத்து மோட்டார் சைக்கிளைத் திருப்பி கேட்டபோது அவர் திரும்ப கொடுக்காமல் அலைக்கழித்துவந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்னை இருந்து வந்ததாகக்கூறப்படுகிறது.
இந்நிலையில் சுரேஷ், அவரது சகோதரர் யுவனேஷ் (27), விக்னேஷ் (27) ஆகியோருடன் சேர்ந்து முத்துவேலின் உறவினரான சக்திவேல் (27) என்பவரை கடந்த 4 நாள்களுக்கு முன் காரில் வந்து திடீரென கடத்திச்சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து முத்துவேலிடம் மோட்டார் சைக்கிளைத் திருப்பி தந்தால் சக்திவேலை விடுவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கடத்தப்பட்ட சக்திவேலின் தாயார் தங்கரத்தினம், தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் சாம்சன் ஜெபதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது, சக்திவேலை கடத்திய 3 பேரும் முதலூரில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், கடத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைதுசெய்து சக்திவேலை மீட்டனர்.