திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள செட்டிக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(42). இவர் அரசு பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக நெல்லை, திசையன்விளை பகுதியில் செல்போன் விற்பனை கடை உள்ளது. இந்தக் கடையில் சட்டவிரோதமாக மதுப்பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், மதுப்பாட்டில்களை சட்டவிரோதமாக அரசுப் பேருந்தில் கடத்தி வருவதாகவும் தூத்துக்குடி மாவட்ட மது ஒழிப்பு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மதுஒழிப்பு அலுவலர்கள் மீகா தலைமையில், உதவி ஆய்வாளர் ஜோசப், தலைமைக் காவலர் சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜெயக்குமாரை கையும், களவுமாக பிடிக்கத் திட்டமிட்டனர்.
அதன்படி இன்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து தூத்துக்குடி, திசையன்விளை நோக்கி வந்த அரசுப் பேருந்தில் ஜெயக்குமார் மதுப்பாட்டில்களை கடத்தி வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்று தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் வந்த அரசுப் பேருந்தில் மதுவிலக்கு காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் பேருந்தின், முதலுதவிப் பொருள்கள் மற்றும் உதிரிபாகங்கள் வைக்கும் பெட்டியில் 20 வெளிநாட்டு ரக மதுப்பாட்டில்கள் பதுக்கி கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயக்குமாரை கைது செய்த காவல் துறையினர், அவரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 20 வெளிநாட்டு ரக மதுப்பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலர் மீகா கூறுகையில், கைதுசெய்யப்பட்ட அரசுப்பேருந்து நடத்துநர் ஜெயக்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : படிக்கட்டில் தொங்கிக்கொண்டு சென்றதால் நேர்ந்த விபரீதம் - 7ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!